ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய நேரிடும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி

மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரித்து உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான அனைத்து விபரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டதால், அவரது திடீர் மரணம் மக்களின் மனதில் பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எனவே, அவர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது, குணமடைந்து வருவதாக கூறப்பட்டது, மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட சந்தேகத்துக்குரிய நிகழ்வுகள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், உண்மைகளை வெளிப்படுத்தவும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டை மனுதாரர் கேட்டுக் கொண்டிருந்தார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் தலைமையிலான விடுமுறைக்கால அமர்வின் முன்னர் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது ஆஜரான அரசுதரப்பு வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி வைத்தியநாதன் சில கேள்விகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அனைவருக்குமே இதுதொடர்பாக கேள்வி கேட்க உரிமை உள்ளது. எனக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகம் உண்டு.

ஜெயலலிதா நடப்பதாக ஒருநாள் கூறப்பட்டது, மற்றொருநாள் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வெளியே வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று என்ன ஆனது?

முதல்-அமைச்சர் குணமடைந்து வருவதாகவும், அவர் சாப்பிடுவதாகவும், கையொப்பமிடுவதாகவும், ஆலோசனை கூட்டங்களைகூட நடத்துவதாகவும் செய்தித்தாள்களின் மூலமாக நாம் பார்த்தோம். ஆனால், திடீரென்று அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடல்நிலை தொடர்பாககூட வீடியோ வெளியிடப்பட்டது. உயிர் வாழ்வது என்பது அடிப்படை உரிமையாகும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆஸ்பத்திரியில் அவரை சென்று பார்க்க உறவினர்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் (மத்திய அரசுதரப்பு வழக்கறிஞர் மதனகோபால்) ஆஸ்பத்திரிக்கு சென்றீர்கள். ஆனால், அவரது உடல்நிலை தொடர்பாக நீங்கள் வெளிப்படையாக எதையுமே தெரிவிக்கவில்லை. உங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால், கோர்ட்டிடம் எதையுமே தெரிவிக்காமல் மவுனமாக இருந்து விட்டீர்கள்.

அவர் உயிருடன் இருந்தபோது நீங்கள் எதுவுமே தெரிவிக்காததால், எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் எழுந்தால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடக்கூடும்.

இவ்வாறு கூறிய நீதிபதி, இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts

Leave a Comment

No need to Wait Like our page to Watch Video
Or wait 150 seconds